February 8, 2026

“மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டவர்…” – தஞ்சையில் ஸ்டாலினை சாடிய இபிஎஸ்!

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் | கோப்புப் படம்

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் | கோப்புப் படம்

தஞ்சாவூர்: “மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின். ஆனால், விவசாயம் பாதிக்கப்படும் போதெல்லாம், விவசாயிகளை காப்பாற்றியதுஅதிமுக அரசு. அதிமுக மக்களுக்கான இயக்கம், திமுக குடும்பத்துக்கான கட்சி” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அதிமுக நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளுக்கு எப்போதும் பல்வேறு நன்மைகளை செய்தது அதிமுக ஆட்சிதான். திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து இட்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த மீத்தேன் எடுக்கவிடாமல் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. எங்கள் ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரினோம்.

உர மானியம், உழவு மானியம், குறுவை தொகுப்பு திட்டத்தை நாங்கள் சிறப்பாக வழங்கினோம். 5 ஆண்டுகளில் இரு முறை கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம். விவசாயம் பாதிக்கப்படும் போதெல்லாம், விவசாயிகளை காப்பாற்றியது அதிமுக அரசே. அதிமுக மக்களுக்கான இயக்கம், திமுக குடும்பத்துக்கான கட்சி. இங்கு தொண்டர்கள்தான் தலைவர்கள்.

முதல்வராக நான் இருந்தபோது, கடும் வறட்சி, கஜா புயல், கரோனா என சோதனையான காலகட்டத்திலும் அதிமுக ஆட்சியில் சிறப்பான நிர்வாகத்தை கொடுத்தோம். ஓராண்டு காலம் கரோனாவால் எதுவும் இயங்காமல் அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை. அந்த சூழலிலும் சிறப்பான ஆட்சி நடத்தினோம். தற்போது வருமானம் வரும் காலத்திலும் திமுக அரசு கடன் வாங்குகிறது. இதுவரை திமுக ஆட்சி ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது.

விலைவாசி உயர்வு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றால் தற்போது தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும்” என்றார்.

Spread the love