சென்னை: தனியார் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்துக்கு திட்ட அனுமதி அளிக்க ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, இந்த புகாரின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு செப்டம்பரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு, ஜூன் 12-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அன்று லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை மீது நீதிபதி முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
பழநி பஞ்சாமிர்தம் மீண்டும் சட்டவிரோத விற்பனை: ஆன்லைனில் அதிக விலையால் பக்தர்கள் அதிர்ச்சி
நிதி ஆயோக், என்டிஏ கூட்டங்கள் புறக்கணிப்பு: டெல்லி செல்லாத புதுவை முதல்வர் ரங்கசாமி
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என முழங்கியவர்” – பாரதிராஜாவுக்கு திருமாவளவன் புகழஞ்சலி