டெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (56) உச்ச தலைவரானார்.
அமெரிக்காவின் தாக்குதலில் மொஜ்தபா காமேனி படுகாயமடைந்ததாக தகவல் வெளியானது. பதவியேற்றது முதல் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை, எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன. தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட அவர் பங்கேற்கவில்லை.
இந்த சூழலில் காமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலின் சேனல் 14 கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. இதற்கு, தி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட முந்தைய அறிக்கை, ஈரான்வயர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் நிர்வாகத்துக்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டியது.
தி ஜெருசலேம் போஸ்ட், “காமேனி விரைவில் தியாகி ஆனார் என்ற செய்தியைக் கேட்டால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்” என்று தெரிவித்திருந்தது. மேலும் அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், உச்ச தலைவருடன் நேரடித் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாகிவிட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மொஜ்தபா காமேனி தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. மெஹ்ர் செய்தி நிறுவனத்தால் முதல் முறையாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ, காமேனியின் உடல்நிலை குறித்த வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வீடியோ எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

More Stories
அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு: சீனா சாடல்
தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு – 7 பேர் உயிரிழப்பு
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு