சென்னை: தமிழக அரசின் ரூ.25 கோடி முதலீடு பெற்ற ராப்டீ.எச்வி நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர் மையத்தை முதல்வர் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் முன்னோடி உயர்மின்னழுத்த மின்சார இருசக்கர வாகனம் (இபைக்) தயாரிப்பு நிறுவனமான ராப்டீ.எச்வி, சென்னை மணப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
குரோம்பேட்டை எம்ஐடி, திருச்சி என்ஐடி கல்லூரிகளில் பயின்று, டெஸ்லா, விப்ரோ உட்பட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழகப் பொறியாளர்களால் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் உருவாக்கிய எச்வி-டெக் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட டி30, இந்தியாவின் முதல் உயர்மின்னழுத்த மின்சார இருசக்கர வாகனமாகும்.
இது 240 வோல்ட் மின்னழுத்தக் கட்டமைப்பைக் கொண்டது. மேலும், மின்சார கார்களுக்கான சிசிஎஸ்-2 விரைவு மின்னேற்ற நிலையங்களிலும் சார்ஜ் செய்யலாம்.
தற்போது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை பெருங்குடியில் 3 தளங்களுடன் புதிய வாடிக்கையாளர் மையத்தை ராப்டீ.எச்வி நிறுவனம் அமைத்துள்ளது.
இந்த மையமானது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) ரூ.25 கோடி நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், டிட்கோ மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், செயல் இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே செயல்பட்டு வந்த தொழிற்சாலை விற்பனையகத்தை மேம்படுத்தி, தற்போது இந்த புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வாடிக்கையாளர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு அதன் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதுடன், நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் கலந்துரையாடவும், சோதனை ஓட்டம் மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய புத்தொழில் முதலீட்டுக் கொள்கையின்கீழ், ராப்டீ எனர்ஜி நிறுவனத்தில் டிட்கோ ரூ.25 கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும், அக்னிகுல் காஸ்மோஸ் உள்ளிட்ட பிற ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் டிட்கோ முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
முக்கொம்பில் அமைச்சர் ஆனந்த் ஆய்வு: காவிரி கதவணை சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க உத்தரவு
“தவெக 6 மாத காலமாக தந்து வருவது துயர ஆட்சியே” – பழனிசாமி விமர்சனம்
“தமிழகத்தில் ‘ரத்து’ அரசு நடத்தும் தவெக” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்