புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதவுள்ளது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. ஆனால் அதற்கு முந்தைய ஆட்டத்தில் தனது சொந்த மைதானமான பெங்களூருவில் ஆர்சிபி அணி, டெல்லி கேப்பிடல்ஸிடம் தோல்வி கண்டிருந்தது.
எனவே, அந்தத் தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி வீரர்கள் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், கிருணல் பாண்டியா என அனைவருமே அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.
அதேபோல், பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தர், கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோர் பலம் சேர்க்ககூடியவர்களாக உள்ளனர். அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ள அணி, சொந்த மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தும் நோக்கத்தில் களமிறங்குகிறது.
பஞ்சாப் அணியுடனான கடந்த ஆட்டத்தில் டெல்லி வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 152 ரன்களைக் குவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும் இது. அதேபோல் அவருக்கு உறுதுணையாக நித்திஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்களைச் சேர்த்தார். இவர்களிடமிருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல்திறன் இந்த ஆட்டத்தில் வெளிப்படக்கூடும்.
அதேபோல் பதும் நிசங்கா, டேவிட் மில்லர், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் ஒட்டு மொத்த பந்து வீச்சு துறையும் கடும்சிதைவுக்கு உட்பட்டிருந்தது. பெங்களூரு அணியிலும் பேட்டிங்கில் அதிரடி பட்டாளங்கள் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வியூகங்களை மாற்றி அமைக்கக்கூடும்.

More Stories
“பொறுமையை சோதிக்கிறது… புனிதம் காக்கப்பட வேண்டும்” – ஐபிஎல் குறித்து கவாஸ்கர்
“எதைச் செய்ய வேண்டும் என்று ஆட்டம் சொல்லிக் கொடுக்கும்” – சஞ்சு சாம்சன் உற்சாகம்
பதிலடி கொடுக்கும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் பலப்பரீட்சை