September 3, 2026

ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி – ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன் டிசி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் உட்பட உறுப்பு நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்றனர்.

மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான், கிர்​கிஸ்​தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்​மீனியா பிரதமர் நிகோல் பாஷின்​யான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்​தனியாகச் சந்​தித்​துப் பேசி​னார்.

இந்நிலையில், நரேந்திர மோடி – மசூத் பெசெஷ்கி​யான் சந்திப்பின்போது இந்தியா – ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டதா என்று மார்கோ ரூபியோவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயல்பாகவே ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகின்றன. உலகம் முழுவதும் பல நாடுகள் ஈாரனிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

அமெரிக்காவும்கூட பல்வேறு விவகாரங்களில் ஈரானிய ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்துள்ளது. சில பேச்சுவார்த்தைகளின்போது ஈரானிய ஆட்சியாளர்களை நாங்களும் சந்தித்துள்ளோம். அவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

அதேநேரத்தில், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதால், அந்த நாட்டுக்கு வேறு எந்த நாடும் உதவக் கூடாது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கவும், அணு ஆயுதத்தை உருவாக்கவும் பயன்படுத்தக்கூடிய வருவாயை ஈரான் ஈட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க எந்த நாடும் அவர்களுக்கு உதவக்கூடாது. ஒருவேளை ஈரானுக்கு உதவ நாடுகள் முடிவு செய்தால் நாங்கள் அவர்கள் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love