வாஷிங்டன் டிசி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், நரேந்திர மோடி – மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது இந்தியா – ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டதா என்று மார்கோ ரூபியோவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயல்பாகவே ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகின்றன. உலகம் முழுவதும் பல நாடுகள் ஈாரனிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
அமெரிக்காவும்கூட பல்வேறு விவகாரங்களில் ஈரானிய ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்துள்ளது. சில பேச்சுவார்த்தைகளின்போது ஈரானிய ஆட்சியாளர்களை நாங்களும் சந்தித்துள்ளோம். அவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
அதேநேரத்தில், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதால், அந்த நாட்டுக்கு வேறு எந்த நாடும் உதவக் கூடாது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கவும், அணு ஆயுதத்தை உருவாக்கவும் பயன்படுத்தக்கூடிய வருவாயை ஈரான் ஈட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க எந்த நாடும் அவர்களுக்கு உதவக்கூடாது. ஒருவேளை ஈரானுக்கு உதவ நாடுகள் முடிவு செய்தால் நாங்கள் அவர்கள் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்
கவனம் ஈர்த்த முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் – நேபாளத்தில் 6 நாளில் 100 மீட்புப் பணிகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்