April 8, 2026

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் சின்​னங்​களில் கூட்​டணி கட்​சிகளின் வேட்​பாளர்​கள் போட்​டி​யிட தடை விதிக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, தேசிய மக்​கள் சக்தி கட்​சி​யின் தலை​வ​ரான வழக்​கறிஞர் எம்​.எல்​.ர​வி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் குறிப்பிட்டிருந்​த​தாவது: தேர்​தலில் போட்டியிடும் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகள் மற்ற கட்சிகளு​டன் கூட்​டணி அமைக்​கின்​றன. அப்​படி அமைக்​கும் போது, கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் கட்​சி​யின் சின்​னத்​தில், அங்​கீ​காரமற்ற கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களும் போட்​டி​யிட்டு வரு​கின்​றனர்.

அதற்​கேற்ப, கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் மாற்று கட்சி வேட்பாளர்​களை தங்​களது கட்சி உறுப்​பினர்​களாக அங்​கீகரித்து தேர்​தல் படிவங்​கள் வழங்​கப்​படு​கின்​றன. அதை தேர்​தல் ஆணைய​மும் ஏற்​றுக் ​கொள்​கிறது.

ஜனநாயகம் கேள்விக்குறியாகும்: ஒரு கட்​சி​யின் சின்​னத்​தில் நின்று வெற்றி பெற்​றதும், மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​படும் பிரதிநி​தி​கள், அவர்​கள் சார்ந்​துள்ள கட்​சி​யின் உறுப்பினர்களாகவே பேர​வை​யில் செயல்​படு​கின்​றனர்.

இது ஜனநாயகத்தை கேள்​விக்​குறி​யாக்​கும் செயல். அரசி​யல் கட்சிகளின் இது​போன்ற செயல்​பாடு​களை ஒரு​போதும் தேர்​தல் ஆணை​யம் ஊக்​குவிக்​கக்​கூ​டாது. கூட்​ட​ணி​யில் உள்ள மாற்று கட்சி​யினரை தங்​களது கட்​சி​யின​ராக அங்​கீகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் ‘ஏ ’படிவம் மற்​றும் ‘பி’ படிவத்தை வேட்​பு மனு பரிசீலனை​யின் ​போது கண்​டிப்​பான முறை​யில் ஆய்வு செய்ய வேண்​டும்.

தேர்​தல் சின்​னங்​கள் தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க தகுந்த வழி​காட்​டு​தல்​களை வகுக்​க​வும், தேர்​தலில் போட்​டி​யிடும் அரசி​யல் கட்​சிகள் தங்​களது கட்​சி​யினருக்கு மட்​டுமே தங்​களது சின்​னத்தை ஒதுக்க வேண்​டுமென்​றும், மாற்று கட்சிகளின் வேட்பாளர்​களுக்கு தங்​களது சின்​னத்தை ஒதுக்க தடை விதிக்கவும் தேர்​தல் ஆணை​யத்துக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை: இந்த மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, சின்​னங்​கள் ஒதுக்கீட்​டில் விதி​மீறல்​கள் இருந்​தால் அதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் உரிய நடவடிக்கை எடுக்​கும். மேலும், இதுதொடர்​பாக தேர்​தல் வழக்கு மட்​டுமே தொடர முடி​யும் எனக் கூறி வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர்​.

Spread the love