August 24, 2026

அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டதை, அடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தவெக-வில் இணைந்தனர். இதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், வழக்கறிஞர்கள் வாதம் துவங்கியுள்ளது.

இந்நிலையில், ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த பி.ஜி.சந்திரசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘ஒரே விவகாரத்துக்காக ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏற்கெனவே சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வழக்கறிஞர்கள் வாதம் துவங்கிவிட்டது. ஒரு பிரச்சினையில் ஒரு வழக்கு போதும். நிலுவை வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்?’ என கேள்வி எழுப்பியது.

மேலும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Spread the love