புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகையால் பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸார், மத்திய ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கும் விழா வரும் ஆக.9-ம் ( ஞாயிற்றுக் கிழமை ) கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கிறது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று காவல் துறைக்கு விருதுகளை வழங்குகிறார். இதற்காக நாளை சனிக்கிழமை மாலை மத்திய அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகிறார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையம் வரும் அமித் ஷா சாலை மார்க்கமாக ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள ஓட்டல் அக்கார்டுக்கு வந்து தங்குகிறார். அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அங்கிருந்து அவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை விழா நடக்கும் கோரிமேடு போலீஸ் மைதானம் செல்கிறார். இதனால், விமான நிலையம் முதல், ராஜீவ் காந்தி சதுக்கம், கோரிமேடு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சர் வருகையையொட்டி மத்திய ரிசர்வ் படையின் 8 கம்பெனி பாதுகாப்புப் படையினர் புதுவை வந்துள்ளனர். புதுவை காவல்துறையை சேர்ந்த 500 போலீஸார் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுடன் ஐஆர்பின் மற்றும் ரிசர்வ் படையினர் என 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதையொட்டி புதுவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம் – நாளை மதியம் 2 மணி முதல் கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) காலை 5.30 மணி முதல் மத்திய அமைச்சர் புறப்பட்டு செல்லும் வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். தேவைக்கேற்ப அந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் செலுத்தப்படும்.
சிவாஜி சிலையிலிருந்து வாகனங்கள் முத்தியால்பேட்டை வழியாக திருப்பிவிடப்படும். ஜிப்மரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக இந்திராகாந்தி சிலைக்கு வாகனங்கள் திருப்பிவிடப்படும். அமைச்சரின் முழு பயண வழித்தடத்திலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என போக்குவரத்து எஸ்பி திவ்யா தெரிவித்துள்ளார்.
ட்ரோன்கள் பறக்க தடை:
புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவில், “மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது புதுவையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பறக்க தடை மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
ஆக.8 மற்றும் 9-ம் தேதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் உட்பட எந்தவொரு வான்வழி பறக்கும் சாதனங்களையும் இயக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. உத்தரவை மீறினால் பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 223 மற்றும் சட்டத்தின் பிற பொருத்தமான பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என்று ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையொட்டி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடக்கும் முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்வை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

More Stories
கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுதினம் முன்னிட்டு 500 தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு காலை உணவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்
குறுவை நிவாரணமா, சிறப்புத் தொகுப்பா? – முதல்வர், அமைச்சர் பதிலில் முரண்பாடு என முத்தரசன் சாடல்
நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு