சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போடி தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேனி பகுதிகளில் தீவிரமான பரப்புரைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். தனது பிரச்சாரம் அனைத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் ஓபிஎஸ்.
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் விறுவிறுப்பு அதிகமாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் தீவிர பரப்புரைகள் காரணமாக தேர்தல் களத்தில் மேலும் சூடாக்கியுள்ளது. இதனிடையில் நேற்றைய வேட்புமனுத் தாக்கல் சரிபார்க்கும் பணிகள் துவங்கிய நிலையில், ஒரு தொகுதியில் தவெகவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனியில் பரப்புரை
இதனிடையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், தேனியில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ஓபிஎஸ். சமீபத்தில் திமுகவில் இணைந்த அவர் போடி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேனி பரப்புரையில் ஓபிஎஸ் பேசும்போது, ஊர்ந்து ஊர்ந்து போய் காலை தொட்டு முதலமைச்சர் பதவியை சசிகலாவிடம் வாங்கினார்.
பழனிசாமியை முதல்வராக்கிய சசிகலா
அந்தம்மா இதுவரைக்கு எந்த ஆம்பளையும் தொட்டதில்லை. பழனிசாமி தோளை தட்டிக்கொடுத்து இவர் தான் முதலமைச்சர் என்று நியமித்தார். அவரையே இன்று விமர்சிக்கிறார். எந்தளவுக்கு நன்றியுள்ள மனிதர் இபிஎஸ். அரசியலில் யார் நன்றி உடையவர்களாக இருந்தார் என்பதை தீர்மானிக்க கூடிய சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள். அரசியலில் நன்றிக்கெட்ட மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான்.
பதினொரு தேர்தலில் படு தோல்வி
பொதுச்செயலாளராக வந்ததில் இருந்து பதினொரு தேர்தலை சந்தித்து படு தோல்வியை அடைந்துள்ளார். இவ்வாறு இபிஎஸ் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ஓபிஎஸ். முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் இணைய ஓ. பன்னீர்செல்வம் பெரிதும் முயற்சி செய்த நிலையில், இபிஎஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து ட்விஸ்ட் கொடுத்தார் ஓபிஎஸ்.
திமுக வேட்பாளராக ஓபிஎஸ்
இதனை பிற கட்சியை சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், போடி தொகுதியில் திமுக சார்பாக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். இத்தனை ஆண்டு காலமாக இரட்டை இலை சின்னத்தில் போட்டி போட்டு வந்த ஓபிஎஸ், தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். இதற்காக தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரச்சாரம் அனைத்திலும் இபிஎஸ் துரோகம் செய்தததாக பட்டியல் போட்டு பேசி வருகிறார் ஓபிஎஸ்.
தேர்தல் பரப்புரையை துவங்கிய சசிகலா.. அதிமுகவுக்கு பாதிப்பா.. சட்டென டிடிவி தினகரன் அளித்த பதில்
இதனிடையில் சோழவந்தான் பரப்புரையில் பேசிய சசிகலா, சிறை செல்ல வேண்டிய காரணத்தால் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றுவதற்காக ஒருவரை பதவியில் அமர்த்தினேன். அவரே என்னை கட்சியை விட்டு நீக்கினார் என இபிஎஸ் குறித்து பேசினார். இப்படி எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவர் துரோகம் செய்து விட்டதாக தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இது எந்தளவுக்கு தேர்தலில் எடுபடும் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இபிஎஸ் பதிலடி
இதனிடையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசும்போது, “ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் எந்தளவு மரியாதை கொடுத்தோம். துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் பதவியெல்லாம் கொடுத்தோம். அவர் பி டீமாகி கட்சியை உடைக்க நினைத்தார். உன்னை கட்சியில் சேர்த்தால் என்ன செய்திருப்பாய். அதிமுகவையே விற்பனை செய்து இருப்பீர்கள் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்பு… சொத்து விவர சர்ச்சையால் திமுகவினர் எதிர்ப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க திருச்சி அள்ளித்துறை மக்கள் முடிவு!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என்.பாண்டி அவர்கள் பச்சளநாயக்கன்பட்டியில் வாக்குச் சேகரிப்பு செய்தார்.