இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும், பாகிஸ்தான் ராணுவப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பொது சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை காரணம் காட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜேஏஏசி அமைப்புக்கு பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்த தடைக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருடனான மோதலின்போது வணிகர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து ராவலகோட் நகரில் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன.
இதுதொடர்பாக ராவலகோட்டின் உயர்மட்ட சிவில் அதிகாரியான கமிஷனர் சர்தார் வாஹீத் கான் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜேஏஏசி போராட்டக்காரர்கள் மருத்துவமனை பிணவறைக்கு வெளியே கூடியிருந்தனர். அந்த இடத்தில் பதற்றமான சூழல் உருவானதால், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.
அப்போது அக்குழுவைச் சேர்ந்தவர்கள் தானியங்கி துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுக்கும்போது 6 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்’’ என்றார்.
இந்நிலையில், உள்ளூர் மக்களும், ஜேஏஏசி ஆதரவாளர்களும் அரசின் அதிகாரப்பூர்வ தகவலை மறுத்துள்ளனர். பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் நேற்று தீவிரம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் ஜூலை 27-ம் தேதி அந்த பிராந்தியத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 45 இடங்களில், அகதிகளுக்காக 12 இடங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஜேஏஏசி அமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தச் சூழலில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

More Stories
அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
இந்தியாவுடனான நட்பின் அடையாளமாக சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை நிறுவ இஸ்ரேல் அரசு திட்டம்
ட்ரம்ப் அமல்படுத்திய எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க மாசசூசெட்ஸ் மாகாண பெடரல் நீதிமன்றம் தீர்ப்பு