கேளம்பாக்கம்: தனியார் ராக்கெட் தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்பட்ட 2 ராக்கெட்கள் ஒரே நேரத்தில் நாளை (அக்.10) விண்ணில் ஏவப்பட உள்ளன. ‘ரூமி ட்வின் மிஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ‘ரூமி 1’, ‘ரூமி 2’ என பெயரிடப்பட்டுள்ள 2 ராக்கெட்டுகள் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து ஏவப்படுகின்றன.
‘ஸ்பேஸ் ஜோன்’ என்ற ராக்கெட் தயாரிப்பு மையத்தை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் இளம் விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த மையம் சார்பில் முதல் ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் 2 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் திட்டத்துக்கான ஆய்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன.
சந்திரயான் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இரு ராக்கெட்டுகளும் 100 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபிரிட் ராக்கெட் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்த உள்ளனர்.
மயில்சாமி அண்ணாதுரை, டிஆர்டிஓ விஞ்ஞானி மாணிக்கவாசகம், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். கேளம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் மேகலிங்கம், அங்குள்ள புவனா கிருஷ்ணன் மெட்ரிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் தாம்பரம் பாரத் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் ஆராய்ச்சிப் பிரிவில் உயர்கல்வி பயின்றார்.
விண்வெளித் துறை ஆர்வத்தின் காரணமாக சுமார் ரூ.4.5 கோடி முதலீட்டில் ‘ஸ்பேஸ் ஜோன்’ மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இம்மையத்தில் 12 ஆராய்ச்சி மற்றும் சோதனைக் கூடங்கள் உள்ளன. 28 இளம் விஞ்ஞானிகள் பணியாற்றி வரும் நிலையில், இதன் மூலம் 75 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆனந்த் மேகலிங்கம் தெரிவித்துள்ளார்.

More Stories
இமானுவேல் சேகரன் பிறந்த நாள்: முதல்வர் விஜய், தலைவர்கள் புகழ் வணக்கம்
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்
கர்நாடக எல்லையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து: ஊழியர் படுகாயம்