November 26, 2026

காசி தமிழ் சங்கமம் 5.0: சிறப்பு ரயிலைத் தொடங்கி வைத்தார் ஆளுநர்

சென்னை: காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வில் பங்கேற்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கான கன்னியாகுமரி–பனாரஸ் சிறப்பு ரயிலை (06041), தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நவம்பர் 26-ம் தேதி சென்னை எழும்பூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆளுநருடன் அவரது துணைவியார், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் 207 பேர் கொண்ட முதல் குழுவில், 105 பேர் சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் நவம்பர் 27-ம் தேதி பனாரஸ் சென்றடையும். நிகழ்வுக்காக கன்னியாகுமரி, சென்னை மற்றும் கோயம்புத்தூரை பனாரஸுடன் இணைக்கும் ஏழு ஜோடி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்கள் வாரணாசியில் தங்கியிருக்கும் காலத்தில் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட தமிழர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். ஒரு மாதம் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் 5-வது பதிப்பு, “திருக்குறள் கற்போம்” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

Spread the love