September 29, 2026

ஈரான் போர் எதிரொலி.. ஒரே ஆண்டில் மூன்றாம் முறை உயர போகும் வீட்டு உபயோக சாதனங்களின் விலை.!!

சென்னை: பண்டிகை காலம் வந்தாலே சம்பளம் வாங்குபவர்களின் போனஸ் பணத்தை அப்படியே இழுத்து கொள்ள வீட்டு உபயோக சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலைகளை குறைத்து ஏராளமான ஆஃபர்களை வழங்குவது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டு இந்த வழக்கத்திற்கு நேர்மாறாக அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை அதிரடியாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் போரினால் கடந்த சில மாதங்களாக தாமிரம், எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் மற்றும் கச்சா எண்ணெயின் விலைகள் சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளன.

சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து இருப்பதும் அந்நிய செலாவணி மாற்றமும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஏசி, டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணு வீட்டு உபயோக சாதனங்களின் விலைகளை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முக்கியமாக தாமிரத்தை அதிகம் பயன்படுத்தும் ஏசி-களின் விலை 8% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல முன்னணி ஏசி நிறுவனங்கள் 10% வரை விலையை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. AC விலை மட்டுமன்றி எல்.இ.டி. டிவி, வாஷிங் மெஷின்கள் விலையும் 5% முதல் 8% வரை உயரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விலைகள் உயர்த்தப்பட்டால் ஒரே ஆண்டில் மின்னணு சாதனங்களின் விலை மூன்றாம் முறையாக விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கடைகள் மற்றும் warehouse-களில் ஏற்கனவே பழைய விலையில் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (Existing Inventory) தீரும் வரை வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி வரை தற்காலிகமாகப் பழைய விலையிலேயே பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் அடுத்தடுத்த பண்டிகைகளின் போது அதிகரித்த விலையோடு பொருட்களை வாங்கும் சூழல் ஏற்பட கூடும்.

Spread the love