கும்பகோணம் வட்டம் உடையாளூரில் வடக்கு திசையைப் பார்த்த நிலையில் செல்வ மகா காளியம்மன் கோயில் உள்ளது.
சிதம்பரத்தில் நடராஜருக்கும், சிவகாமியம்மனுக்கும் போட்டி வந்தபோது, நடராஜர் வெற்றி பெற்றார். தோல்வியுற்ற சிவகாமியம்மன், ஆக்ரோஷமான தில்லைக் காளியாக, சிதம்பரத்தின் புறநகர் பகுதியிலும், அதன்பின், ஆக்ரோஷம் குறைந்து சாந்த சொரூபியாக கும்பகோணத்தை அடுத்த உடையாளூரிலும் குடி கொண்டதாக கூறப்படுகிறது.
வலது கைகளில், சூலம், பச்சைக்கிளி, உடுக்கை, கத்தி; இடது கைகளில் அக்னிச் சட்டி, கேடயம், மணி, கபாலம் ஏந்தியும், தலையில் பாம்புடன் கூடிய ஜோலாகேஷத்துடன் 8 கைகளுடன், வலது காலை மடக்கி, இடது காலில் அசுரனை வதம் செய்து மிதித்தபடி இங்குள்ள அம்மன் அருள்பாலிக்கிறார்.
திருமணத் தடை நீங்க வெள்ளியிலான பச்சைக் கிளி; குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கருப்பு நிற சேலை; வளையல், குடும்ப பிரச்சினைகள் தீர (அங்குள்ள மண்ணடியில் நடைபெறும் கூத்தாடும் நிகழ்ச்சியின் போது) கூத்தாடி ஆகியவற்றை செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது இங்கு வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை.
பங்குனி திருவிழாவின்போது அங்குள்ள மண்ணடியில் விடிய விடிய நடைபெறும் கூத்தாடும் நிகழ்ச்சியை இந்த அம்மனும், பால் குளத்தியம்மனும் சிறப்பலங்காரத்தில் நேரில் வந்து பார்ப்பதாக ஐதீகம்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமையன்று நவ சண்டி யாகமும், மறுநாள் கோடாபிஷேகமும் நடைபெறும். அப்போது ஏராளமானோர் பங்கேற்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ தொலைவுள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

More Stories
திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில்: ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்: ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு 12,000+ பக்தர்கள் தரிசனம்
திருக்கழுக்குன்றம் திரிபுர சுந்தரி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண பெருவிழா