புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு பாராட்டு விழாவில் சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையே வாய்விட்டுச் சிரிக்க வைத்துள்ளார் இந்தியக் குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் இல்லத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நரேந்தர் பெர்வால், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் தான் சந்தித்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை மோடியிடம் விவரித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லை பதற்றங்களுக்கு நடுவே, அந்தப் போட்டி தனக்கு எவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுத்தது என்பதை நரேந்தர் பெர்வால் விவரிக்கத் தொடங்கினார்.
நரேந்தர் பெர்வால் பேசும் போது, “2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் எனது முதல் சுற்றே பாகிஸ்தான் வீரருடன் தான் அமைந்தது. அது ராணுவ வீரர்களுக்கான போட்டி என்பதால், இந்திய ராணுவ உயரதிகாரிகளிடம் இருந்து எனக்குத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘நீ என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் எக்காரணம் கொண்டும் பாகிஸ்தானிடம் தோற்று விடக்கூடாது’ என்று அவர்கள் எனக்குக் கட்டளையிட்டிருந்தனர்.
பதற்றமான அந்தப் போட்டியில் நான் திறம்படப் போராடி வெற்றி பெற்றேன். ஆனால், போட்டியின்போது எங்களது இருவரின் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. போட்டி முடிந்த பிறகு, காயங்களுக்குத் தையல் போடுவதற்காக இருவரும் ஒரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
மருத்துவமனையில் தையல் போட்டுக்கொண்டிருந்த போது, அந்த பாகிஸ்தான் வீரர் என்னை நோக்கி, ‘சகோதரா, நான் ஒன்று சொல்லட்டுமா?’ என்றார். நானும் ‘சொல்லுங்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘2014-ல் உங்கள் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். உங்களுக்குப் பயிற்சியளித்த ராணுவப் பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா. இப்போது உன்னோடு மோதித் தோற்று முகத்தில் காயத்தோடு நிற்கிறேன். உன் பெயரும் நரேந்தர். எனக்கு ‘நரேந்திர’ என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது’ என்று புலம்பினார்” என்றார்.
இதை கேட்ட அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியும் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டு சிரித்தார்.
நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பைப் பாராட்டி உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களின் இத்தகைய தருணங்கள் விளையாட்டு உலகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன என்று பாராட்டினார்.

More Stories
பிரக்ஞானந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஃபிடே
3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள்
“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” – இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC