சென்னை: உதவித்தொகை உயர்வு குறித்து மானியக் கோரிக்கையில் எந்த அறிவிப்பும் வெளியிடாததற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகளில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளாக உதவித்தொகை எதுவும் உயர்த்தி வழங்கப்படாமல் உள்ளது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. தற்போது, புதிய அரசு பதவியேற்றவுடன் கடந்த ஜூன் 2-ம் தேதி முதல்வரை எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தினோம்.
பட்ஜெட்டில் உதவித்தொகை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அது ஏமாற்றமாகவே அமைந்தது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கையின்போது, அதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
போராடத் தூண்டுகிறது
சமூக நீதி மற்றும் சம நீதி பேசும் அரசு, மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாற்றுத்திறனாளிகளை மீண்டும், மீண்டும் போராடத் தூண்டுவதற்கு இது வழிவகுக்கிறது. இதை எங்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More Stories
மேட்டூர் அணையை திறக்க வருகை தந்த முதல்வர் விஜய் – மக்கள் உற்சாக வரவேற்பு
சூரியனை சுற்றி திடீரென ஒளிவட்டம்: ஆர்வமுடன் படம் பிடித்த கடலூர், புதுவை மக்கள்
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் – முதல்வர் விஜய் புகழ் வணக்கம்