
டெஹ்ரான்: எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிவதால் டெஹ்ரானை கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
ஈரான், அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நேற்று 11-வது நாளை எட்டியது. ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன. இதன் காரணமாக டெஹ்ரானிலும், டெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் வீடுகளிலும் கூட கரும்புகை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலும் கூட புகை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் அங்குள்ள நோயாளிகள் மூச்சுவிட முடியாமல் திணறி வருவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் வசிக்கும் அப்கைன் காகி என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கூறியதாவது: எனது குடும்பத்தார் இப்போது மத்திய டெஹ்ரான் பகுதியில் உள்ளனர். காலை 10 மணிக்கு கூட அங்கு இரவு நேரத்தில் இருப்பது போன்ற நிலை இருக்கிறது. எண்ணெய் கிணறுகள் பற்றி எரிவதால் எங்கும் புகைமேகம் சூழ்ந்துள்ளது.
வீடுகளில் இருப்பவர்களே மூச்சு விடுவதற்கு திணறும்போது வெளியே வருபவர்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த போரால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை.
குழந்தைகள், முதியோர், செல்லப்பிராணிகள் உட்பட அனைவருமே சிரமப்படுகிறோம். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் மிகவும் தீவிரமானவை. இதனால் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் சேதமடைந்து பற்றி எரிகின்றன. மருத்துவமனை, வீடுகளிலும் புகை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் வசிக்கும் மற்றொரு ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கூறும்போது, “டெஹ்ரானில் வசிக்கும் அனைத்து மக்களும் முகக்கவசம் அணியுமாறு அரசு தெரிவித்துள்ளது. அங்குள்ள எனது தந்தையிடம் சில விநாடிகள் மட்டுமே பேச முடிந்தது.
காற்றில் கடுமையான எண்ணெய் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் காற்றை விட, நச்சுத்தன்மை வாய்ந்த கருப்பு மழைத் துளிகள் தான் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. மோசமான நிலையை எங்கள் குடும்பத்தார் அங்கு அனு பவித்து வருகின்றனர்” என்றார்.

More Stories
துபை விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 4 பேர் காயம்!
டிரம்ப்புடன் அம்பானியின் ரிலையன்ஸ்: அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! – ஈரான் அரசு அறிவிப்பு!