March 22, 2026

“ஐபிஎல் 2026 சீசனை உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளோம்” – கொல்கத்தா கேப்டன் ரஹானே பகிர்வு

கொல்கத்தா: அதிரடி மாற்றங்களுடன் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான அணியை கட்டமைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனை எதிர்கொள்ள தங்கள் அணியின் திட்டம் குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியதாவது:

“ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறான சவால்களை ஒரு வீரராகவும், அணியின் கேப்டனாகவும் எதிர்கொள்கிறேன். என்னுடைய இந்தப் பயணத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் எது மாதிரியான சவால் இருந்தாலும் நேர்மறையான மனநிலையோடு இருப்பதுதான். கடந்த சீசன் முதல் கொல்கத்தா அணியை வழிநடத்தி வருகிறது. எனக்கு இந்த பொறுப்பை வழங்கிய எங்கள் அணி நிர்வாகத்துக்கு கடமைப்பட்டுளேன்.

இந்த மாதிரியான பெரிய தொடர்கள் எப்போதும் வாய்ப்புகளும், சவால்களும் நிச்சயம் இருக்கும். நாம் இதில் உள்ள வாய்ப்புகளை பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. அந்த வகையில் தான் எனது கிரிக்கெட் கரியரை நான் அணுகி வருகிறேன். ஒரு வீரனாக, ஒரு கேப்டனாக எனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.

இந்த சீசனை மிக சிறப்பாக தொடங்க நாங்கள் விரும்புகிறோம். இது நீண்ட தொடராகும். நிச்சயம் அனைத்து ஆட்டங்களிளும் நாங்கள் எதிர்பார்க்கின்ற முடிவை பெற முடியாது. பிழைகள் கூட இருக்க கூடும். இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மில் உள்ளனர். எங்கள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இந்த சீசனை உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளோம்” என ரஹானே தெரிவித்தார்.

கடந்த சீசனில் 5 வெற்றிகளுடன் 8-ம் இடத்தில் தொடரை நிறைவு செய்தது கொல்கத்தா அணி. இதில் கடந்த சீசனில் ரஹானே 390 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறை கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்ஃபெர்ட், முஸர்பானி, கார்த்திக் தியாகி, ஆகாஷ் தீப், ராகுல் திரிபாதி, பிரஷாந்த் சோலங்கி ஆகியோரை புதிதாக கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

அவர்களுடன் ரஹானே, ரிங்கு சிங், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ரமன்தீப் சிங், ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, அனுகுல் ராய், பாவெல், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா ஆகியோர் இணைந்து விளையாட உள்ளனர்.

Spread the love