November 18, 2026

ஒட்டன்சத்திரத்தில் டவுன் பேருந்துகளின் பின்புறத்திலும் வழித்தடப் பலகை வைக்கப்படுமா? – பொதுமக்கள் கோரிக்கை!

ஒட்டன்சத்திரம். நவ–18

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மகளிர் வெற்றி பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அரசு டவுன் பேருந்துகளின் பின்புறத்தில், பேருந்து செல்லும் ஊரின் பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பேருந்தின் முன்பக்கத்தில் எந்த ஊருக்குச் செல்கிறது என்ற வழித்தட விவரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பின்புறத்தில் ஊரின் பெயருக்குப் பதிலாக TNSTC MDU என்ற எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதனால் பேருந்தின் பின்னால் வரும் பயணிகள், குறிப்பாக பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பொதுமக்கள், அந்தப் பேருந்து எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே, முன்பக்கத்தில் வழித்தடப் பலகை வைக்கப்பட்டுள்ளதைப் போலவே, பேருந்தின் பின்புறத்திலும் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் பலகை வைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் பயணச் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ஒட்டன்சத்திரம் பகுதியில் இயக்கப்படும் அனைத்து அரசு டவுன் பேருந்துகளிலும் பின்புற வழித்தடப் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love