பாலமேடு:மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை போதிய பருவமழை இல்லாததாலும், கடும் வெயிலின் தாக்கத்தாலும் தற்போது ஒரு சொட்டு நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த அணையின் தற்போதைய வறட்சி நிலை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சுமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அணைக்கு முறையான நீர் வரத்து இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சாத்தையாறு அணையின் மொத்தக் கொள்ளளவான 29 அடியில், சுமார் 11 அடிக்கும் மேல் வண்டல் மண் மற்றும் தூர் படிந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அணையில் தண்ணீரை முழுமையாகச் சேமிக்க முடியவில்லை. தவிர சமீப மாதங்களாக கடும் வெயில் நிலவி வருவதன் காரணமாக அணையில் தேங்கியிருந்த கணிசமான நீரும் முழுமையாக ஆவியாகி அணை வற்றி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
1 சொட்டு நீர் கூட இல்லாமல் முழுமையாக சாத்தையாறு அணை வற்றியுள்ளதால், இந்த அணையை நம்பியிருக்கும் சுமார் 11 கண்மாய்கள் மற்றும் சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் அணையை சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

More Stories
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!
தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர்: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய்..