October 23, 2026

கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான அனுமதி – டிச.31 வரை நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான அனுமதியை டிசம்பர் 31-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பண்டிகைக் கால விநியோகத்தை சீராக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் சர்க்கரை விலை ஏறக்குறைய 30% அதிகரித்திருக்கிறது. ‘தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழ்கிற வானிலை மாற்றங்களால், உணவு விலையேற்றம் தொடர்ந்து நீடிக்கக்கூடும்’ என்று ரிசர்வ் வங்கி விடுத்த எச்சரிக்கை சார்ந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

சர்க்கரை மட்டுமல்லாது அரிசி விலையும் சந்தையில் தற்போது ஏற்றம் கண்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சர்க்கரை விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்க செய்துள்ளது. இந்த சூழலில் சர்க்கரை விலை மேலும் அதிகரிக்காத வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்டது.

அந்த வகையில் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்குப் போதுமான சர்க்கரை கிடைப்பதையும் நிலையான விலையையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி, பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அதிகரித்த தேவை, கரும்புப் பயிரில் வானிலை தொடர்பான சேதம், உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம், பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவே தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பதுக்கல் மற்றும் செயற்கையான பற்றாக்குறையை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன் மூலம் சர்க்கரை ஆலைகள் மற்றும் வியாபாரிகளிடத்தில் உள்ள சர்க்கரை இருப்பு விவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டு இருப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த அனுமதியை வரும் டிச.31 வரை அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த அனுமதி அக்.31 வரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இதுவரை 2.6 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரை இறக்குமதி ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் கச்சா சர்க்கரை கொள்முதல் விலை சமநிலையில் இல்லாத காரணத்தால் இறக்குமதி மந்தமாகவே இருந்து வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் சர்க்கரை விலை குறைந்து, இறக்குமதி சாத்தியமாகும் சூழல் உருவாகும் நேரங்களில் இந்த நீட்டிப்பு அனுமதி பயன் தரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நடப்பு ஆண்டில் மத்திய அரசு சர்க்கரை உற்பத்தியை 343 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு வைத்திருந்தது. ஆனால், போதிய மழையின்மையால் உற்பத்தியானது 306 லட்சம் டன்களாகச் சரிந்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட சுமார் 11% – 12% குறைவு.

நாட்டின் வருடாந்திர நுகர்வுக்குச் சுமார் 280 லட்சம் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. தற்போதைய உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், வழக்கமாக இருக்க வேண்டிய கையிருப்பை (Buffer Stock) விட 30 லட்சம் டன் குறைவாக இருப்பதே தற்போதைய சந்தைப் பதற்றத்துக்கு முக்கியக் காரணம். இருப்பினும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அளித்த அனுமதியை நீட்டித்துள்ளது.

Spread the love