September 7, 2026

கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர் கமலி…

ராசிபுரத்தில் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற கஞ்சி கலய ஊர்வலத்தில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கமலி, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி பங்கேற்றார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவ்வாடை அணிந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் ஆதிபராசக்தி பொது மன்றம் சார்பில் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சி கலயம் மற்றும் முளைப்பாரியை தலையில் சுமந்தபடி, ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து பழைய பேருந்து நிலையம், கடைவீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, ராசிபுரம் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள ஆதிபராசக்தி பொது மன்ற கோவிலை சென்றடைந்தனர்.

இந்த ஊர்வலத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக கால்நடைத்துறை அமைச்சருமான கமலி கலந்து கொண்டு, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்று ஆதிபராசக்தி கோவிலை சென்றடைந்தார்.

பின்னர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலயங்களுக்கு வேப்பிலை கட்டி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவ்வாடை அணிந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love