October 30, 2026

காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வில் 23 மொழிகளில் திருக்குறள்: 1,000 கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் பயிற்சி

புதுடெல்லி: காசி தமிழ் சங்கமம் 5.0-வில் நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளின் 1,000 மாணவர்களுக்கு 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் என 23 மொழிகளில் ’திருக்குறள் கற்றல்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) செய்கிறது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் உயரிய குறிக்கோளின் அடிப்படையில் இதுவரை நான்கு காசித் தமிழ்ச் சங்கமங்களை நடத்தியுள்ளது.

இந்தியாவின் தொன்மையான பண்பாட்டு மரபுகளையும் மொழிசார் பெருமைகளையும் ஒருங்கிணைப்பது அதன் நோக்கம். அந்தவகையில், ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இதன் கருப்பொருள், ‘திருக்குறள் கற்றல்’ ஆகும்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்திய மாநிலங்களிலிருந்து 1,000 கல்லூரி மாணவர்கள் ‘திருக்குறள் கற்றல்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த திட்டத்தைச் சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) நடத்தவுள்ளது.

இத்திட்டத்தில் தேர்வாகும் மாணவர்கள் ஒரு மாத காலம் திருக்குறளைக் கற்கும் பயிற்சியை மேற்கொள்வார்கள். பயிற்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10,000 பயிற்சித் தொகையாக சிஐசிடி வழங்க உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வானவர்கள் சிஐசிடி உருவாக்கியுள்ள www.kts.cict.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, ஒரு மாத காலம் திருக்குறளைப் பயிலலாம். திருக்குறள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், சிஐசிடி இரண்டு மணிநேர இணையவழி அறிமுக வகுப்பையும் நடத்தவுள்ளது.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் ‘திருக்குறள் பன்மொழிச் செயலி’ வாயிலாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளம் குறித்து ’இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் டெல்லி வந்திருந்த சிஐசிடியின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் கூறுகையில், ‘மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, திருக்குறளின் சிறப்பினை எளிய முறையில் அறிந்துகொள்ள உதவும் வகையிலும் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொழி வேறுபாடுகளைக் கடந்து திருவள்ளுவரின் அறக்கருத்துகளைப் பரப்புவதற்கும், இளைய தலைமுறையினரிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் இம்முயற்சி துணைபுரியும்.

அஸ்ஸாமி, வங்காளம், போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் திருக்குறள் குறித்த சிந்தனைகளைக் கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் தங்களது தாய்மொழியில் திருக்குறளின் கருத்துகளையும் அறநெறிகளையும் புரிந்துகொள்ள முடியும்.

திருக்குறளின் அறச்சிந்தனைகளையும், உலகப் பொதுமறை என்னும் அதன் சிறப்பையும் பல்வேறு தரப்பினரிடம் கொண்டுசேர்ப்பது இதன் நோக்கம்.

திருக்குறள் குறித்த உரைகள், சைகை மொழியிலான திருக்குறள், திருக்குறள் ஒலிநூல்கள், திருக்குறள் கதைகள், காணொளிகள், குறுங்காட்சிகள், பதாகைகள் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் வளங்களும் இவ்விணையதளத்தில் இடம்பெற்றுள்ளன’ எனத் தெரிவித்தார்.

Spread the love