வெப்பச்சலன மழை தாக்கத்தால் வெயில் முழுமையாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. பகல் நேரங்களில் வழக்கம்போல வெயில் நீடிக்கும்.
இந்த ஆண்டு வெப்பத்தால் தமிழகம் முழுவதும் கொதித்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. ஜூன் மாதம் தொடங்கிய பிறகும் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்கிறது. சென்னை, வேலூர், திருவள்ளூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் கூடிய வெப்பம் பதிவாகி வருகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்கள், வெளியே செல்லும் பொதுமக்கள் அலுவலக பணியாளர்கள்,முதியோர்கள் என அனைவரும் வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெயிலால் சோர்ந்து போன மக்களுக்கு சற்று நிம்மதி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்காலிகமாக மந்தமடைந்துள்ளதால், அங்கிருந்து தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனுடன் வளிமண்டலத்தில் நிலவும் அதிக ஈரப்பதமும் இணைந்து, ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பச்சலன மழை பெய்யும் சூழலை உருவாக்கியுள்ளது
தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
இது தொடர்பாக, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் “ கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொய்வடைவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சாதகமான மேற்கு திசை காற்றின் போக்கு மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதம் காரணமாக ஜூன் 11ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தமிழ்நாட்டில் மாலை/இரவு வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் & தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய மழை மாலை/இரவு நேரத்தில் பதிவாக கூடும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், பகலில் மழை வாய்ப்பு இல்லை வெயிலே தொடரும், இடிமழை வாய்ப்பு மாலை/இரவு மட்டுமே. அத்துடன் மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்ககூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெப்ப சலன மழை
வெப்பச்சலன மழையின் தன்மை என்னவென்றால், ஒரு பகுதியில் பலத்த மழை பெய்தாலும், சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு பகுதியில் ஒரு துளி கூட மழை பெய்யாமல் இருக்கலாம். எனவே இந்த மழை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக பதிவாகும் என்று கூற முடியாது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு, இந்த மாலை மற்றும் இரவு நேர மழை ஓரளவு குளிர்ச்சியையும் நிவாரணத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கோடை வெப்பம் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதால், குடிநீர் அருந்துதல், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

More Stories
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மம்தாவுக்கு தொடர்ந்து பின்னடைவு.. ஒரேவாரத்தில் 3 எம்பிக்கள் காலி.. தகர்ந்த TMC கோட்டை!
ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு