ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (தமிழக ஆளுநர்): கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய பாரதிராஜாவின் படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்): திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன.
கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்துக்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து அவரை நினைவுகூரும்.
பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா. அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ: திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது. ஆனால், அந்த ஒளி வெள்ளத்தின் பிரகாசம் இருளையும், இரவுகளையும் கடந்து இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்கு ஜொலித்துக் கொண்டே இருக்கும். நான் உயிராக நேசித்த பாரதிராஜா எனும் உன்னதப் படைப்பாளி போய்விட்டாரே! அந்த இடத்தை நிரப்புவதற்கு எவராலும் இயலாது.
நயினார் நாகேந்திரன் (பாஜக தலைவர்): தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம்பிடித்த மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி வேதனையையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா இறைவன் திருவடியில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ரஜினிகாந்த்: பாரதிராஜாவின் திறமை, சாதனை பற்றி அனைவருக்கும் தெரியும். சினிமா துறையில் யாருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதலாவதாக குரல் கொடுத்து போராடியவர். அவருடைய பெயர் என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் இருக்கும்.
மனதுள் தோன்றியதை வெளிப்படையாக சொல்லிவிடுவார். என்னைப் பற்றியும் நிறைய விமர்சனங்களை வைத்திருக்கிறார். உன்னை எனக்கு பிடிக்கும்; உனது நடிப்பு எனக்கு பிடிக்காது என்பார்.
அவருடன் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவர் உயிருடன் இருக்கும்போது அவரை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. அவர் என்றென்றும் எனது நினைவில் இருப்பார்.
அண்ணாமலை: திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில் பாரதிராஜா பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த அவர் மறைவுக்கு எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன்: கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர்.
அன்புமணி ராமதாஸ்: தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜாவைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை.
அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர் சரத்குமார், கருணாஸ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More Stories
முதல்வர் விஜய் பிரச்சாரம் தொழுப்பேடுக்கு மாற்றம்
22-09-2026
22-09-2026