July 15, 2026

சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்

சென்னை: சொத்து பிரச்சினையில் சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்காக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று நேரில் ஆஜரானார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ-வும், தமிழக நிதியமைச்சருமான மரிய வில்சன், கடந்த 2022 ஆக.8-ம் தேதி, சொத்து தகராறில் புதுச்

சேரி எழில் நகரில் வசித்துவரும் அவரது சகோதரர் மரியகுலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரியகுலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொள்ள நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மரியவில்சன் ஆஜராகவில்லை.

தற்போது அவர் தமிழக நிதியமைச்சராகப் பதவி வகித்துவரும் நிலையில் கடந்த 10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராக விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பிலும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக மரியவில்சன் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து, ஜூலை 13 அன்று அங்கு இருதரப்பும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அமைச்சர் மரிய வில்சன், மூத்த வழக்கறிஞர் காஜா மொய்தீன் ஹிஸ்தி மற்றும் வழக்கறிஞர் ராஜா சீனிவாசன் ஆகியோருடன் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தில் நீதிபதி பாலசுப்பிரமணியன் முன்பாக நேற்று மாலை ஆஜரானார். அவரது சகோதரர் மரியகுலோத்தும் தனது தரப்பு வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், விசாரணையை நீதிபதி, ஜூலை 21-க்கு தள்ளிவைத்தார். அன்றைய தினமும் அமைச்சர் மரிய வில்சனும், அவரது சகோதரரும் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட் டுள்ளார்.

Spread the love