July 28, 2026

சங்கரநாராயணசாமி கோயில் ஆடித்தபசு திருவிழா: தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி: சங்கரநாராயணசாமி கோயில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில், ஆடித்தபசு திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 12 மணியளவில் கோமதி அம்பாள் கோயிலில் இருந்து மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார்.

பின்னர், மாலை 6.05 மணியளவில் சுவாமி, சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்குக் காட்சியளிக்கும் ஆடித்தபசு காட்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு, சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்குக் காட்சி கொடுக்கிறார். இந்தத் தபசு காட்சியைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், மண்டகப்படிதாரர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

Spread the love