மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
8 ஆண்டுகளுக்குப் பின்பு கிழக்குகோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே வீரவசந்தராயர் மண்டபத்திலிருந்த கடைகளில் 2018 பிப்.2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாகச் சேதமடைந்தது. ரூ.38.30 கோடியில் வீரவசந்தராயர் மண்டபத்தை சீமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே, வரும் செப். 17-ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது திருப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புப் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, குடமுழுக்கு விழாவுக்கு முன்னதாக வீரவசந்தராயர் மண்டபத்தை நேற்று திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வீரவசந்தராயர் மண்டபம் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை 9 மணியளவில் பிரதிஷ்டை விழா மற்றும் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் அ.கல்லாணை, எஸ்.கேஆர்.தங்கப்பாண்டி, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் பி.கே.எம்.செல்லையா, மு.சீனிவாசன், து.சுப்புலெட்சுமி, எஸ்.மீனா, கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை, உதவி ஆணையர் சீ.மெய்வேல் ஆகியோர் பங்கேற்றனர். வீரவசந்தராயர் மண்டபப் பணிகளுக்காக அடைக்கப்பட்டிருந்த கிழக்கு கோபுர வாசல் 8 ஆண்டுகளுக்குப் பின்பு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

More Stories
ஏனாமில் பக்தர்கள் வழங்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் ஆக.30-ல் திறப்பு