தூத்துக்குடி: மணப்பாட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறை கடற்கரையில் நேற்று லட்சக்கணக்கான மீன்கள் உயிரோடு கரை ஒதுங்கின.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் கடந்த 10-ம் தேதி திடீரென லட்சக்கணக்கான சாளை மீன்கள் உயிரோடு கரை ஒதுங்கின. பருவநிலை காரணமாக மீன்கள் மொத்தமாக கரை பகுதிக்கு வந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறை கடற்கரை பகுதியில் நேற்று திடீரென லட்சக்கணக்கான மீன்கள் உயிரோடு கரை ஒதுங்கின. மணப்பாட்டில் கரை ஒதுங்கியது போலவே, இங்கேயும் பேய் சாளை என்ற மீன்களே அதிகமாக கரை ஒதுங்கியிருந்தன. கடற்கரையில் கொத்து கொத்தாக ஒதுங்கிய மீன்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடற்கரையில் திரண்டு அதிர்ச்சியுடன் பார்த்தனர். பலர் அந்த மீன்களை அள்ளிச் சென்றனர்.
மணப்பாடு கடற்கரையைத் தொடர்ந்து சிங்கித்துறையிலும் மீன்கள் மொத்தமாக கரை ஒதுங்கி இருப்பதால், ஆய்வாளர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் உயிரோடு சாளை மீன்கள் ஒதுங்கி வருகின்றன. இது இயற்கையாக நடக்கும் வழக்கமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை சாளை மீன் சீசன் ஆகும்.
பருவநிலை மாற்றம் காரணமாக கடற்கரைப் பகுதியில் காற்று வீசுவதால், மேற்பரப்பு நீர் கடலில் இருந்து விலகிச் செல்கிறது. அதற்குப் பதிலாக ஆழ்கடலில் உள்ள குளிர்ந்த நீர் மேலே வருகிறது. அப்போது கடலின் நீரோட்டம், கூட்டமாக செல்லும் சாளை மீன்களை கரையை நோக்கி தள்ளி விடுகிறது. இதனால் சில கூட்டங்களை சேர்ந்த மீன்கள் கரையில் உயிரோடு ஒதுங்கி வருகின்றன. இருப்பினும் இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்த மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்திடம் கேட்டுள்ளோம் என்றனர்.

More Stories
கோவை குறிச்சிக் குளத்தில் அரிய வகை பறவைகள் வலசை
செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும் பட்டாம்பூச்சி மாதம்: பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக திகழும் பட்டாம்பூச்சிகள்
கோவையில் ‘விதை விநாயகர்’ சிலைகள் விற்பனை தீவிரம்