August 31, 2026

“சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்” – மு.வீரபாண்டியன்

சென்னை: தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியப் பங்காற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கவும், வரும் பட்ஜெட்டில் இத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3,000 கோடியாக உயர்த்தவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கிய பங்காற்றுவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாகும். தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, ரூபாய் 32 லட்சம் கோடியாகும். அதில் 30 முதல் 35 விழுக்காடு அளவிற்கு பங்களிப்பு செலுத்துவது இந்நிறுவனங்களாகும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 8 விழுக்காடாகும்.இந்திய ஏற்றுமதியில் இவற்றின் பங்களிப்பு 40 விழுக்காடாகும். தமிழகத்தில் 6.89 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 15.07 விழுக்காடு நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.

தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள்களில் சுமார் 49 விழுக்காடு இந்நிறுவனங்கள் உற்பத்திச் செய்பவையாகும். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்நிறுவனங்களை தமிழக அரசு பாதுகாத்திட வேண்டும். ஊக்கப்படுத்திட வேண்டும். இந்தியாவில் உற்பத்தித் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

அவை செயற்கை நுண்ணறிவு, தானியங்கி எந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தித்துறையில் வேகமாக புகுத்துகின்றன. இதனால் அவை புதிய வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை இழப்பிற்கும் உள்ளாக்குகின்றன. அவர்களை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குவதோடு, அதீதமான லாபத்தை அடைகின்றன.

வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் நமது நாட்டின் செல்வாதாரங்களை கொள்ளையடிப்பதுடன், உற்பத்தித்துறையில் நாட்டின் தன்னிறைவை, தற்சார்பு பொருளாதாரத்தை ஒழித்துக்கட்ட முனைகின்றன. உள்நாட்டு – வெளிநாட்டு பெரு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி அவற்றை ஒழித்துக் கட்ட முயல்கின்றன.

இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களையும், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியதும், அந்நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும். எனவே, இந்நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். 2026 – 27 பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூபாய் 2142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதை ரூபாய் 3000 கோடியாக உயர்த்த வேண்டுமென தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, தமிழக அரசு அதை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.

இந்நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும். பேரிடர் காலத்தில் இந்நிறுவனங்கள் பாதிக்கப்படும் பொழுது, உரிய இழப்பீட்டை பெறும் வகையில் பேரிடர் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love