June 10, 2026

சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து ஓசூர் நகரை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓசூர்: தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள ஓசூர் நகரைப் பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் பசுமையான சூழல் மற்றும் இதமான காலநிலையால் ஓசூர் நகரம், ‘குட்டி இங்கிலாந்து’ என அழைக்கப்பட்டது. தற்போது, தொழிற்சாலைகள், வாகனங்கள் பெருக்கம், புதிய சாலைகள் அமைப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர், நிலம், காற்று மாசுபட்டு பெரும் சுற்றுச்சூழல் சவால்களைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக தொழில்துறை மையமாக உள்ளதால், நிலத்தடி நீரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பெருக்கத்தால், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கெலவரப்பள்ளி அணை, ராமநாயக்கன் ஏரி போன்ற நீர்நிலைகளில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளது.

வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள், மலைகள் மற்றும் குன்றுகளை வெடிவைத்துத் தகர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் காற்று மற்றும் நிலம் மாசடைந்து வருகிறது. இதனால், ஓசூர் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

இதுதொடர்பாக இயற்கை ஆர்வலர் ரவிசங்கர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன.

அதற்கு இணையாக எஸ்டிஆர்ஆர் சாலை, அறிவுசார் வழித்தடம், ரிங் ரோடுகள் என புதிய சாலைத் திட்டங்களுக்காகவும், வீட்டுமனைகளுக்காகவும் விளைநிலங்களும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

மலைக் குன்றுகள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வரும் காலத்தில் இயற்கை வளங்களை அழித்து புதிய திட்டங்கள் கொண்டு வருவதை குறைக்க வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்தும், குடியிருப்பு பகுதிகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் விடப்பட வேண்டும். மழைநீர் சேகரிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

நீர்நிலைகளை தூர்வாரிப் பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை பகுதிகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அடர்ந்த காடுகளை உருவாக்க வேண்டும். வன எல்லைகளை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குவாரிகளை நடத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரங்களில் நிலையான வளர்ச்சியே மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் காக்கும். எனவே, நகரை சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து காக்க தொலைநோக்குத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Spread the love