June 10, 2026

தென்மேற்கு பருவமழையால் வறட்சியில் இருந்து மீள தொடங்கிய வைகை

ஆண்டிபட்டி: கடந்த சில மாதங்களாகவே, வைகை அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை. இதனால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கடந்த 29-ம் தேதி 20.51 அடியாக சரிந்தது. இதனால் அணையைச் சார்ந்துள்ள குடிநீர் திட்டங்கள் அனைத்தும் செயலிழந்தன.

மூலவைகை வறண்டே கிடப்பதால் நீர்வரத்துக்காக முல்லைப் பெரியாறு அணையையே நம்பி இருக்க வேணடிய நிலை ஏற்பட்டது. கடந்த வாரம் வரை அங்கும் நீர்மட்டமும், நீர்வரத்தும் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் கேரளாவில் பருவமழை பெய்யத் தொடங்கியது. இதனால் கடந்த 3-ம் தேதி 110.80 அடியாக இருந்த நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து நேற்று 112.50 அடியை எட்டியது. நேற்று முன்தினம் 823 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,290 கனஅடியாக உயர்ந்தது.

இதனால் 350 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து நேற்று 273 கனஅடியாக உயர்ந்தது. சீரான நீர்வரத்து உள்ளதால் வறட்சியால் வெடிப்பு ஏற்பட்டிருந்த மண் படிமங்களுக்குள் நீர் உட்புகுந்து நீர்த்தேக்கப் பகுதியின் பரப்பு அதிகரித்து வருகிறது.

கேரளாவில் தொடரும் பருவமழையும், வைகை அணைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நீர்வரத்தும் 5 மாவட்ட விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

செயல்பட தொடங்கிய குடிநீர் திட்டங்கள்

வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் முதலக்கம் பட்டி அருகில் உள்ள பிக்அப் அணையில் தேக்கப்படுகிறது.

இந்த இடத்தில்தான் குடிநீர் திட்டங்களுக்கான உறைகிணறுகள் அதிகளவு அமைந்துள்ளன. வருசநாடு, தேனி, செல்லம்பட்டி, ஆண்டிபட்டி, மதுரை, சேடபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்காக நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

வைகை அணை யில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில் குடிநீர் திட்டங்கள் முடங்கின. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து அனைத்து குடிநீர் திட்டங்களிலும் 50 சதவீதத்துக்கும் மேல் நீர் பெறப்பட்டு செயல்பட தொடங்கியது.

Spread the love