April 18, 2026

சென்னையில் எல்பிஜி காஸ் தட்டுப்பாடு: கடும் சிரமத்தை சந்திக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

சென்னையில் காஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் பெரம்பூரில் உள்ள ஆட்டோ காஸ் நிரப்பும் நிலையத்தில் காஸ் நிரப்ப சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள்.

சென்னை: சென்​னை​யில் ஆட்டோ எல்​.பி.ஜி எரி​வாயு கிடைப்​ப​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், ஆட்டோ மற்​றும் கால் டாக்ஸி ஓட்​டுநர்​கள் கடும் சிரமத்தை சந்​திக்​கின்​றனர். பங்க்​-கு​களில் காஸ் நிரப்ப 6 மணி நேரம் வரை காத்​திருக்​கும் அவலநிலை ஏற்​பட்​டுள்​ள​தாக வேதனை தெரி​வித்​தனர்.

மத்​திய கிழக்​கில் நில​வும் போர் பதற்​றம் மற்​றும் விநி​யோகச் சங்​கிலி பாதிப்பு காரண​மாக, எல்​.பி.ஜி இறக்​குமதி குறைந்​துள்​ளது. பற்​றாக்​குறையை சமாளிக்க மாற்று வழிகளை மத்​திய அரசு ஆலோ​சிக்​கிறது.

இதற்​கிடை​யில், வாக​னங்​ளுக்​கான எல்​.பி.ஜி, சி.என்​.ஜி எரி​வாயு கிடைக்​காத​தால், ஓட்​டுநர்​கள் கடும் சிரமத்தை சந்​திக்​கின்​றனர். சென்னை நகரில் பல்​லா​யிரக்​கணக்​கான ஆட்​டோக்​கள், கால் டாக்​சிகள் எல்​.பி.ஜி. மற்​றும் சி.என்​.ஜி எரி​வா​யுவை பயன்​படுத்​துகின்​றனர். இது​போல, அதி​கரிக்​கும் பெட்​ரோல்,

டீசல் விலை உயர்​வால் பலர் தங்​கள் வாக​னங்​களின் கட்​டமைப்பை எல்​.பி.ஜி மற்​றும் சி.என்​.ஜி எரி​வாயு மூலம் இயக்​கும் வகை​யில் மாற்றி அமைத்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆட்டோ எல்​.பி.ஜி மற்​றும் சி.என்​.ஜி எரி​வா​யுக்கு கடந்த சில நாட்​களாகவே தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், நகரின் முக்​கிய பகு​தி​களான வடபழனி, எழும்​பூர், சைதாப்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் உள்ள எரி​வாயு நிரப்​பும் பங்க்​-கு​கள் மூடப்​பட்​டுள்​ளன.

6 மணி நேரம் காத்திருப்பு

அதே​நேரத்​தில், திறந்​திருக்​கும் ஒரு சில பங்க்​-கு​களில் கூட்​டம் அலைமோதுகிறது. கீழ்ப்​பாக்​கம், மீனம்​பாக்​கம் உள்பட சில இடங்​களில் காஸ்நிரப்​புவதற்​காக, நெடுந் தொலை​வுக்கு வரிசை​யில் சுமார் 6 மணி நேரம் வரைகாத்​திருந்​தனர். குறிப்​பாக, மீனம்​பாக்​கத்​தில் உள்ள ஒரு பங்க்​-கில்காஸ் நிரப்ப சுமார் 3 கி.மீ. வரை ஆட்​டோக்​கள் அணிவகுத்து நின்​றன.

இதுகுறித்​து, ஆட்டோ ஓட்​டுநர்​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் கடந்த சில நாட்​களாக, எல்​பிஜி காஸ் கடும் தட்​டுப்​பாடு நில​வு​கிறது. திறக்​கப்​பட்​டுள்ள சில பங்க்​-கு​களில், காஸ் நிரப்ப, காலை 6 மணி நேரம் வரை காத்​திருக்​கும் நிலை உள்​ளது. காஸ் நிரப்​பவே அதிக நேரம் செல​வாவ​தால், சவாரி செல்​வது குறைந்து அன்​றாட வரு​மானம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு கிலோ எல்​.பி.ஜி காஸ்​-ல் 20 கி.மீ. வரை ஆட்டோ ஓடும். ஆனால், ஒரு லிட்​டர் பெட்​ரோலுக்கு 8 கி.மீ. வரை மட்​டுமே செல்​லும். இதனால், பெரும்​பாலான ஆட்​டோக்​கள் எல்​.பி.ஜி காஸ்​-க்கு மாறி​விட்​டன. இப்​போது 12 கிலோ கொள்​ளளவு கொண்ட சிலிண்​டர் ஆட்​டோ​வில் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

பெட்​ரோல் சுமார் 2 லிட்​டர் வரை மட்​டுமே பிடிக்​கும். இதனால், எரி​வா​யுவை நம்​பியே தொழில் செய்ய வேண்​டி​யுள்​ளது. நீண்ட நேரம் காஸ் நிரப்ப காத்​திருக்க வேண்​டி​யுள்​ள​தால், வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்​டு​பவர்​களின் நிலைமை மிக​வும் பரி​தாப​மாக உள்​ளது.

எனவே, பங்க்​-குகளில் எல்​பிஜி காஸ் தட்​டுப்​பாடு இன்றி கிடைக்க மத்​தி​ய-​மாநில அரசுகள் வழி​வகை செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Spread the love