July 30, 2026

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு – பிரதமர் தலைமையில் பேரிடர் நிவாரண குழு அமைப்பு

டோக்கியோ: ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், செவ்வாய்க் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. இந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், தனது தலைமையில் அவசரகால பேரிடர் நிவாரணக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவு உள்ளது. இங்கு குமாமோட்டோ பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடி​யில் 10 கி.மீ ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 7.1 ஆக பதி​வானது.

இதைத் தொடர்ந்​து, ஒரு மீட்​டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்​கூடும் என ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் அது 2 மணி நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டது.

இந்தநிலையில், நிலநடுக்கத்தில் 13 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் சனே டகேச்சி தெரிவித்துள்ளார்.

அவசரகால பேரிடர் நிவாரணப் பணிகள் குழு அமைப்பு:

இந்நிலையில் பிரதமர் சனே டகாய்ச்சி தனது தலைமையில் அவசரகால பேரிடர் நிவாரணப் பணிகள் குழுவை அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரகால பேரிடர் நிவாரணக் குழுவை அமைத்துள்ளேன். அதற்கு நானே தலைவராக செயல்படுவேன். அதன் உறுப்பினர்களாக சில கேபினட் அமைச்சர்கள் இருப்பார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், மின்சார துண்டிப்பு, குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. மேலும் கோடை வெப்பம் காரணமாக மக்களுக்கு ‘ஹீட் ஸ்டோர்க்’ ஏற்படும் அபாயமும் இருக்கின்றது. எனவே நிலைமையை உற்றுநோக்கி உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான உயிரிழப்புகள் கஷிமா நகரில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் தான் நடந்துள்ளது. வணிக வளாக இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் பட்டியல்:

– மார்ச் 11, 2011, 9.0 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது சுனாமியும் உருவாகி 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கூடவே ஃபுகுஷிமா அணு உலையில் பாதிப்பும் ஏற்பட்டது. செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பின்னர் இதுவே மோசமான அணு உலை விபத்தாக அறியப்படுகிறது.

– ஏப்ரல் 16, 2016, 7.3 ரிக்டர் அளவில் குமாமோட்டோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 270 பேர் உயிரிழந்தனர். அப்போது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடுமையான மழையும் பொழிந்து நிலச்சரிவை ஏற்படுத்தியது.

– ஜூன் 18, 2018, 6.1 ‌ரிக்டர் அளவில் ஒசாகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 பேர் உயிரிழந்தனர். அது ஒரு தொழிற்பேட்டை பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

– செப்டம்பர் 6, 2018, 6.7 ரிக்டரில் ஜப்பானின் வடக்கு தீவுப் பகுதியான ஹொகைடோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 பேர் உயிரிழந்தனர். 5.3 மில்லியன் மக்கள் நிலச்சரிவு, மின்சார துண்டிப்பால் தொடர்ச்சியாக பல நாட்கள் பாதிக்கப்பட்டனர்.

– பிப்ரவரி 13, 2021, 7.3 ரிக்டரில் ஃபுகுஷிமா கரையை ஒட்டி நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் படுகாயங்களால் பலர் பாதிக்கப்பட்டனர்.

– மார்ச் 16, 2022, 7.4 ரிக்டர் அளவில் மீண்டும் ஃபுகுஷிமாவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

– ஜனவரி 1, 2024, ⁠7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நோடோ தீபகற்பத்தில் ஏற்பட்டது. புத்தாண்டு நாளில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

– ஆகஸ்ட் 8, ‌2024, 7.1 ரிக்டர் அளவில் தெற்கு மியாஸாகி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Spread the love