ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவ, மாணவியர் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக கடந்த ஜூலை 25-ம் தேதி தலைநகர் ராஞ்சியில் மாணவ, மாணவியர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாணவர் சங்கத்தின் மூத்த தலைவர்கள் தேவேந்திர நாத் மஹதோ (33), ராகுல் கிராந்தி (40), ரூபேஷ் குமார் பால் (30), சவிதா குமாரி (28), ஹபிபா (27) ஆகியோர் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர். இவர்கள் 5 பேரும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு 6 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளது. ஆனால் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. மாணவர்களை சமாதானப்படுத்த ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்த சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த சூழலில் ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டே நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் ராஞ்சியில் நேற்று சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்றனர். போலீஸ் தடுப்புகளை தாண்டி அவர்கள் சட்டசபை வளாகத்திற்குள் முன்னேறினர். அப்போது சிலர் போலீஸார் மீது பாட்டில்கள், காலணிகளை வீசினர்.
மாணவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் நடனம் ஆடியது வியப்பில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். காவல்துறையினர் 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாணவர் சங்க தலைவர் தேவேந்திர நாத் மஹதோ கூறும்போது, “மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு தடியடி நடத்துகிறது. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்டோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடருவோம்” என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “மாணவர்கள் தரப்பில் 6 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் 4 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

More Stories
கேரள பள்ளியில் சாவர்க்கர் பற்றி கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
எர்ணாகுளம் தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்: கேரளாவில் பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு
மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்கள்