சென்னை: தமிழகத்தில் வரும் 28-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் இம்முகாமைத் தொடங்கி வைக்க உள்ளார்.
போலியோ (இளம் பிள்ளை வாதம்) முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்ததைத் தொடர்ந்து, கடந்த 6 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முகாம் வரும் 28-ம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் அரசுப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் இம்முகாமைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் சுமார் 53 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் சிறப்புச் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் எளிதில் சென்றடைய முடியாத மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் மூலமாகச் சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “குழந்தைகளுக்கு அண்மையில் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் தவறாமல் மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும். லேசான காய்ச்சல் அல்லது சளி பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் தாராளமாகச் சொட்டு மருந்து வழங்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
தமிழக இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் ?
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் – முதல்வர் விஜய் பங்கேற்பு