July 28, 2026

ட்ரம்ப்புடனான ‘தொடர்புகள்’ – அமெரிக்க காங்கிரஸில் ஆஜராக ஃபிபா தலைவருக்கு அழைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் உள்ள உறவுகள் தொடர்பாக சர்வதேச காலபந்து சங்கங்கள் கூட்டமைப்பான ஃபிபாவின் தலைவர் கியானி இன்ஃபாண்டினோ மீது அமெரிக்க காங்கிரஸில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இன்ஃபாண்டினோ நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபை நீதித்துறை குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜேமி ரஸ்கின், ஃபிபா தலைவர் இன்ஃபாண்டினோவுக்கு கடிதம் அனுப்பி, டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் ஃபிஃபா மேற்கொண்ட தொடர்புகள் குறித்த ஆவணங்கள், பரிசுகள், நிதிசார் சலுகைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நேரில் விளக்கமளிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ஃபிபா அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இன்ஃபாண்டினோ – ட்ரம்ப் உறவு அதிக கவனத்தை ஈர்த்தது. இதனுடன், உலகக் கோப்பை குலுக்கல் விழாவில் ட்ரம்புக்கு புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஃபிஃபா அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது, அமெரிக்க வீரர் ஃபோலரின் பாலோகன் மீது விதிக்கப்பட்ட சிவப்பு அட்டை தடை நீக்கப்பட வேண்டும் என்று டிரம்ப், இன்ஃபாண்டினோவை பலமுறை தொடர்புகொண்டு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஃபிஃபா அந்தத் தடையை ரத்து செய்தது. இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பல கால்பந்து சங்கங்களின் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் உலகக் கோப்பையை வென்ற இறுதிப்போட்டிக்குப் பிறகு, ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் இணைந்து இன்ஃபாண்டினோ கோப்பையை வழங்கியதும், இருவரும் மைதானத்திற்குள் வந்தபோது ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

ரஸ்கின் தனது கடிதத்தில், உலக கால்பந்தில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து பதவியேற்ற இன்ஃபாண்டினோ, பின்னர் ஃபிஃபாவின் நெறிமுறை கண்காணிப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தியதாகவும், அதனால் வெளிப்படைத்தன்மை குறைந்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவை வளர்த்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகக் கோப்பை டிக்கெட் விற்பனையில் பயன்படுத்தப்பட்ட ‘டைனமிக் பிரைசிங்’ முறையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த முறையால் டிக்கெட் விலைகள் திடீரென உயர்ந்து, ரசிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ரஸ்கின் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணங்களை சமர்ப்பிக்கவும், விசாரணைக்கான நேரத்தை ஒதுக்கவும் ஆகஸ்ட் 9 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், குடியரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இன்ஃபாண்டினோவை கட்டாயப்படுத்தும் அதிகாரம் ரஸ்கினுக்கு இல்லை.

இதற்கிடையில், 2031 மகளிர் உலகக் கோப்பையை அமெரிக்கா நடத்தவுள்ள நிலையில், எதிர்காலத்தில் 2038 ஆண்கள் உலகக் கோப்பையையும் அமெரிக்கா நடத்தும் வாய்ப்பு குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், இன்ஃபாண்டினோ தனது சமூக வலைதள பதிவில், உலகக் கோப்பை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், தன்னை விமர்சிப்பவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் பதிலளித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா தலைவர் தேர்தலுக்கு 200-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்றாலும், சில நாடுகள் எதிர்ப்பை தொடர்கின்றன.

Spread the love