சென்னை: ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முந்தைய திமுக அரசு நிலைநாட்டியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கூறி உள்ளார். தமிழ்த்தாய் விவகாரத்தில் தற்போதைய தவெக அரசு சமரசம் செய்து விட்டதாகவும் விமர்சித்து உள்ளார். முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆளுநரின் அதிகார வரம்புகளை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் உச்சநீதிமன்றத்தை நாடி மாநில உரிமைகளைத் தொடர்ந்து நிலைநாட்டியதை ஆளூர் ஷாநவாஸ் சுட்டி காட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசி இருக்கும் அவர், சட்டமன்றத்தில் ஒரு இருக்கையை கூட அவ்வளவு எளிதாக மாற்றி போட முடியாது. ஒவ்வொன்றையும் அரசு யோசித்து பின் முடிவெடுத்து தான் செய்ய முடியும். ஆளுநர் கேட்டார் என்பதற்காக தேசிய கீதத்தை இருமுறை பாடினோம் என்று சொல்வதையெல்லாம் ஏற்று கொள்ள முடியாது. சட்டமன்றம் என்பது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடம் கிடையாது. சட்டமன்றம் என்பது முழுக்க முழுக்க அவைத்தலைவர் மற்றும் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்ட இடம், மேலும் மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட இடம்.
இந்த இடத்தில் ஆளுநர் கேட்டு கொண்டார் என்பதற்காக 2 முறை தேசிய கீதம் பாடியிருக்கிறீர்கள் என்றால், ஆளுநர் பேச்சை தட்டாமல் கேட்டிருக்கிறீர்கள், சமரசம் செய்திருக்கிறீர்கள் என்றே அர்த்தம். ஆனால் முன்பிருந்த திமுக அரசு, ஆளுநருக்கு எதிராக நின்று மாநில அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி காட்டியது.
தவெக அரசு செய்த சமரசத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரை கொண்ட பல்கலைக்கழகத்திலேயே, பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு அடுத்து மூன்றாவதாக தான் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற அளவிற்கு நிலைமை சென்றுள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார். தவெக அரசு சட்டமன்றத்தில் செய்து கொண்ட சமரசம் எங்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது பாருங்கள்… ஆளுநரோடு தவெக அரசு செய்து கொண்ட சமரசம், மாநில உரிமையில் வந்து தலையிடும் அளவிற்கு வந்துள்ளது என்று ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்து உள்ளார்.

More Stories
டெல்லி எஜமானர்களைப் பகைக்க அஞ்சும் ‘சோபா மாடல்’ முதல்வர்: மேகதாது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நிலம் முறைகேடாக விற்பனை
“மகளிருக்கு விரைவில் ரூ.2,500 உரிமைத் தொகை” – அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்