April 22, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் – மக்களே நோட் பண்ணுங்க!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பயணிகள் நெரிசல் அதிகரிக்கும் சூழலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே கூடுதல் வசதியாக 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாட்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி செல்லும் சிறப்பு ரயில் நாளை ஏப்ரல் 22 இரவு 9.55 மணிக்கு புறப்பட உள்ளது. இந்த ரயில் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் சென்னை எழும்பூரிலிருந்து போத்தனூர் நோக்கி மற்றொரு சிறப்பு ரயில் இரவு 11.55 மணிக்கு இயக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இது ஒரு முக்கியமான சேவையாக இருக்கும்.

  

மேலும் மறுநாள் ஏப்ரல் 23 மதுரையில் இருந்து தாம்பரம் நோக்கி பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவெக வாக்கை பிரிக்குமா அல்லது எடுக்குமா? Explained

சிறப்பு ரயில்கள் இயக்கம்

தேர்தல் காலங்களில் பொதுவாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பது வழக்கம். இதை சமாளிக்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது, பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வேலைக்காக நகரங்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க இந்த சேவைகள் உதவும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்யும் வசதிகள் விரைவில் திறக்கப்படும் எனவும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் அதிக அளவில் பயன்பெற இந்த சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகால சிறப்பு ரயில்களும் இயக்கம்:

  • கோடைக்காலப் பயண நெரிசலை சமாளிக்கவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிக்கவும் தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. சென்னை மற்றும் மேற்குவங்கம் இடையேயான இந்த சேவைகள் விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் பயண தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன.
  • அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06003) மறுநாள் மாலை 4 மணிக்கு கரக்பூரை சென்றடையும். இதன் மறு பயணம், ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு கரக்பூரில் இருந்து தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஈரோடு வரை இயக்கப்படும் (06004).
  • இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் (06005) மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை அடையும். அங்கிருந்து ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் (06006) இந்த ரயில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
  • மேலும், சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06009) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கரக்பூரை சென்றடையும். இதன் மறு சேவை ஏப்ரல் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கரக்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 7.30 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும் (06010).
  • இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. குறிப்பாக 06003 மற்றும் 06004 எண் ரயில்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற ரயில்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Spread the love