சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது. முதற்கட்டமாக இன்று காலை சிறப்புப் பிரிவினருக்கும், விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர 72,633 பேர் விண்ணப்பித்துள்ளனர்
இன்று காலை 8 மணி முதல் நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தேதி மாலை 5 மணி வரை பொதுப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் விரும்பும் இடங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 20 ஆம் தேதியும், அதனை உறுதி செய்த பின்னர் 21 ஆம் தேதி இறுதி ஒதுக்கீடும் அளிக்கப்படும். ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதவிறக்கம் செய்து கொள்ளும் மாணவர்கள், ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2026 – 2027 ஆம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேர்வதற்கான 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் உள்ள 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பண்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை எண் 1-25 வரை இடம்பெற்றுள்ளவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. காலை 8:30 மணிக்கு முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களை சேர்ந்த வரிசை எண் 1 முதல் 30 வரையான மாணவர்களுக்கும், 9 மணிக்கு தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 335. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 202 ஆக உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் 104. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.

More Stories
துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக.12 முதல் விநியோகம்
பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!