July 29, 2026

தர்மநல்லூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே தர்மநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டானோடை கிராமத்தில் 300 குடும்பங்களும், ஏராளமான குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இப்பகுதியினருக்கு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்காததால் தொட்டியின் ஏணி உடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் மேல்நிலை தொட்டியின் மீது ஏறி சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த மேல்நிலை தொட்டி குடிநீரை பயன்படுத்தும் இப்பகுதியினருக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த தொட்டியின் மோட்டார் போர்வெல் உள்ளே விழுந்து விட்டதால் தற்போது 300 குடும்பங்களுக்கு மேல் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் சுற்றியுள்ள வயல்வெளிக்கு சென்று போர்வெல்களில் இருந்து தண்ணீர் பிடித்து வருவதாகவும், இதனால் நேர விரயமாவதோடு, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர்.

இதனால் தங்களுடைய தினசரி வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிய போர்வெல் அமைத்து தடையின்றி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love