September 23, 2026

தலைமை செயலகத்தில் இடம்மாறிய புகார் பெட்டி: குவியும் கூட்டம்- முதல்வர் விஜய் மீது அதிகரித்த நம்பிக்கை

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்கள் குறைகளை எப்படியாவது தீர்த்து வைத்து விடுவார் எனப் பலரும் நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில் தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் அதிக அளவில் மனுக்கள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

”முதல்வன்” படத்தில் ஒரு காட்சி வரும். முதலமைச்சராக வரும் அர்ஜுன் மக்கள் தங்களின் குறைகளை சொல்வதற்காக புகார் பெட்டி வைக்க உத்தரவிடுவார். அந்த பெட்டியின் நோக்கம் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கிறது மட்டுமல்ல. என்றைக்கு அந்த பெட்டியில் ஒரு புகார் கூட இல்லாமல் காலியாக இருக்கிறதோ, அன்றைக்கு தான் இந்த அரசு முழு வெற்றி பெற்றதாக அர்த்தம் எனக் கூறுவார். இதேபோல் நிஜ வாழ்க்கையில் நடக்காதா? அப்படியான முதலமைச்சர்களும், ஆட்சியும் அரங்கேறாதா? என்றெல்லாம் மக்களுக்கு எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்று சொல்வது போல மக்கள் பிரச்சினைகள் தொடர் கதையாகி வருகின்றன.

தமிழக அரசியலில் விஜய்யின் வெற்றி

இந்த சூழலில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆட்சிகளை பார்த்து சலித்து போன மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றத்திற்காக வாக்குகளை செலுத்தி வந்தனர். அந்த வகையில் விஜய்யின் திரைத்துறை கவர்ச்சியும், அரசியல் வருகையும், முன்னெடுத்த நகர்வுகளும், திமுக ஆட்சி மீதான அதிருப்தியும் ஒன்று சேர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது.

  

விஜய் சீட் பேர அரசியல் செய்ய மாட்டார்! மக்கள் நினைப்பது இது தான்_

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கும் வசதி

  • இந்நிலையில் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
  • முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமை செயலகத்திற்கு உள்ளே செயல்படுகிறது.
  • கடந்த திமுக, அதிமுக ஆட்சியின் போது உள்ளே சென்று தனிப்பிரிவு வளாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளிப்பர். அங்குள்ள புகார் பெட்டியிலும் மனுக்களை போடுவர்.

புகார் பெட்டி இடமாற்றம் – காரணம் என்ன?

இந்த சூழலில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, இந்த புகார் பெட்டியில் மனுக்களை போட நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி மாற்று நடவடிக்கைகள் எடுக்கபப்ட்டுள்ளன. இதுபற்றி தலைமை செயலக பத்திரிகையாளர்களிடம் விசாரிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தலைமை செயலகத்திற்கு வெளியில் புகார் பெட்டி இடமாற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையினர் பரிசோதித்து அனுமதிக்க கூடிய இடத்திலேயே பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகளை நேரில் புகார் அளித்தால் விரைந்து தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை நிலவி வந்த நிலையில், புகார் பெட்டியில் மட்டும் மனுக்களை போட்டு விட்டு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைந்து நடவடிக்கை – தமிழக மக்கள் நம்பிக்கை

முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கையின் விளைவாக புகார் மனுக்கள் அதிக அளவில் குவிந்து வருவதை பார்க்க முடிகிறது. இவற்றை முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் கவனித்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பர். சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பர். முதலமைச்சரின் தனிப்பிரிவு உத்தரவின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். அதேசமயம் மக்களை பொறுத்தவரை முதலமைச்சர் விஜய்யே நேரில் பார்த்து விரைவாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது என்றனர்.

இதுதவிர cmhelpline.tnega.org/portal/ta/home என்ற இணையதளம் வாயிலாகவும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பொதுமக்கள் தங்களின் புகார்களை அனுப்பி வைக்கலாம். தங்கள் மனு மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Spread the love