May 20, 2026

தவெக அமைச்சரவையில் இடம்பெறுகிறதா விசிக? – திருமாவளவன் பதில்

சென்னை: “விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தவெக தரப்பில் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் இடம்பெறுமாறு விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்,”அமைச்சரவையில் இடம்பெறுமாறு ஆதவ் அர்ஜுனா விடுத்த அழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த 8 ஆம் தேதி எங்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனாலும், நான் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக கூறினார்கள். அதன்பின் விசிக பொதுச்செயலாளர்களுடன் கலந்து பேசி, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.

பதவியேற்புக்கு பின்னர் எங்கள் அலுவலகம் வந்த முதல்வர் விஜய் அமைச்சரவையில் இணையுமாறு வலியுறுத்தினார். அதனை மீண்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்துள்ளார். இதுகுறித்து எங்கள் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி முடிவை அறிப்போம்.

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றிபெற்றோம். தவெக கூட்டணியில் இணைந்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. எனவே தவெக ஆட்சியமைக்க நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை நல்கினோம்.

தற்போது வெளிப்படையாகவே விசிக, ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தவெக தரப்பில் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பை மதிக்கிறோம். இதுகுறித்து முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்.

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவிலேயே விஜய் கூட்டணிக்காக எங்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், தவெக கூட்டணியில் இணையும் சூழல் உருவாகவில்லை. திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தோம்.

அதிமுகவிலிருந்து ஒரு பிரிவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் தரப்படுமேயானால், எங்களின் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என முன்பே சொல்லியிருந்தேன். தற்போது அமைச்சரவையில் அதிமுகவின் பிரிவுக்கு இடமில்லை என தவெக தரப்பில் எங்களிடம் சொல்லியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love