சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை அதிமுக எதிர்ப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் தொடங்கியது.
தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விசிக, ஐயூஎம்எல்ஏ.க்கள் பேச தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் தவெக அரசுக்கு 65% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.
அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது. அரசுப் பள்ளியில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி கற்க நீட் தேர்வை எதிர்கொள்ள 7.5 % உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது. மேலும், அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்விச் செலவுகளையும் அரசு ஏற்றது.
அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனர், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறி ஆளுங்கட்சியினர் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை ‘தூய சக்தி’ என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் ஏற்கக் கூடாது.” என்று பழனிசாமி கூறினார்.

More Stories
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
சாதிச் சான்றிதழ், தாட்கோ கடன் சிக்கல்களுக்கு தீர்வு காண அமைச்சர் வன்னியரசிடம் பழங்குடியின அமைப்புகள் கோரிக்கை
“தமிழகத்தை அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து திமுக நிச்சயம் மீட்கும்” – உதயநிதி ஸ்டாலின்