சென்னை: “தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வரம்பு மீறிய குற்றங்கள் நடக்கும் இடமாக தமிழ்நாடு மாறிவிட்டது” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘தவெக ஆட்சியில் வரம்பு மீறிய குற்றங்கள் நடக்கும் இடமாக (Vice City) தமிழ்நாடு மாறிவிட்டது.
சென்னையில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்களை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில் ரூ.270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் தவெக நிர்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருட்கள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் விருப்பமான இடமாக ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என தவெக ஆட்சியில் தமிழ்நாடே ‘Vice City’ ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசை திருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர், இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்?
எல்லாவற்றுக்கும் ‘வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
தவெக ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதல்வர் விஜய்யின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
“என்ன செய்கிறது தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை?” – தினகரன் கேள்வி
திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து மக்கள் கட்சி வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்