தீ வைத்து எரிக்கப்பட்ட தவெக தேர்தல் பணிமனை.
திருச்சி: திருச்சி அருகே பேட்டைவாய்த்தலையில் தவெக தேர்தல் பணிமனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையை சேர்ந்தவர் வீர சிவா. தவெக விவசாய அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஸ்ரீரங்கம் தொகுதி தவெக வேட்பாளருக்காக வீட்டின் முன்பு தேர்தல் பணிமனை அமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த தேர்தல் பணிமனை தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக விளம்பர பதாகைகளும் கிழிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வீர சிவா கொடுத்த புகாரின்பேரில் பேட்டைவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தேர்தல் பணிமனைக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்த தவெக பதாகைகளையும் கிழித்தெறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது தெரியவந்தது.
அதனடிப்படையில் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதி தவெக வேட்பாளர் ரமேஷ், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது: பேட்டைவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த எனது தேர்தல் அலுவலகம் மர்ம நபர்களால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் எனக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த பிரச்சினையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

More Stories
கொள்ளிடம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை: அடிப்படை வசதிகள் வேண்டி பயணிகள் அவசரக் கோரிக்கை!
மதுரை கோட்டத்தில் மின்சார ரயில் என்ஜின்களை இயக்க சிறப்பு ஏற்பாடுகள்
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் 17வது ஆண்டு நீர்மோர் வழங்கும் நிகழ்வு