திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. இதில் முதலாவதாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு 11 கஜம் கத்வால் இரட்டை வேட்டி சாத்தப்பட்டது.சுவாமிக்கு வைர அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க பல்லக்கில் கொடிக்கம்பம் வரை கொண்டு வரப்பட்டனர். அங்கு இவர்களின் முன்னிலையில், வேதங்கள் முழங்க, மங்கள இசையுடன் கருடன் சின்னம் பொறித்த கொடி, தங்கக் கொடிமரத்தில் ஆகம சாஸ்திரங்களின்படி ஏற்றப்பட்டது. நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு ஆந்திர அரசு தரப்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராய் பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். முன்னதாக அவர், திருமலையில் கோயிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தார்.
அங்கிருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி கோயிலுக்கு சென்று சமர்ப்பித்தார். அதன் பின்னர், சுவாமி தரிசனம் செய்த அவருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், சந்திரபாபு நாயுடு, 2027-ம் ஆண்டின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புகழ்பெற்ற காலண்டர்கள் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.

More Stories
விநாயகர் சதுர்த்திக்கு கிலோ ரூ.27,000 விலையில் தங்க மோதகம் இனிப்பு – மகாராஷ்டிர கடையில் விற்பனை
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் காயம்
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திர’ சாதனைகள்: பிரிக்ஸ் 2026-ல் இந்தியா பெற்றது என்ன?