கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அவற்றை நாமக்கல் மாநகராட்சி பகுதியில் அமல்படுத்துவது தொடர்பாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு நிறுவனங்கள் போன்ற பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தெருநாய்கள் நிர்வாகம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் நாய்கள் பாதுகாப்பு அமைப்பகம் (ABC மையம்) அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள பகுதிகளில் தெருநாய்கள் நுழையாமலும் வசிக்காமலும் இருக்க சுற்றுச்சுவர்கள், வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், நாய்கள் கடித்தால் முதலுதவி வழங்குவது மற்றும் உடனடியாக புகார் அளிக்கும் நெறிமுறைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மைதானங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதையோ அல்லது வசிப்பதையோ தடுக்க, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். விலங்குகளை ஈர்க்கும் உணவு ஆதாரங்களை அகற்றுவதற்காக முறையான கழிவு மேலாண்மை அமைப்புகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
மாநகராட்சி சார்பில், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தெருநாய்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், மாநகராட்சியின் அலுவலக உதவி எண் 1800 599 7990-க்கு தொடர்பு கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஷ் கண்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான் ராஜா, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய் பேசினார்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது